×

ராமேஸ்வரம் கடற்கரையில் பணிகள் தீவிரம் ₹23 கோடியில் புதிய ஜெட்டி பாலம்: 150 விசைப்படகுகளை நிறுத்தலாம் என அதிகாரிகள் தகவல்

ராமேஸ்வரம்: ராமே ஸ்வரம் துறைமுக கடற்கரையில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் படகுகளை நிறுத்தி, மீன்களை இறக்குவதற்கு போதிய தள வசதி இல்லை. 1975ம் ஆண்டு கட்டப்பட்ட ஜெட்டி பாலம் மட்டுமே உள்ளது. இதுவும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த ஜெட்டி பாலத்தில் அதிகபட்சமாக 15 படகுகளை மட்டுமே நிறுத்தி மீன்களை இறக்க முடியும். மற்ற விசைப்படகுகள் அனைத்தும் கடலில் நிறுத்தப்பட்டு, சிறிய நாட்டுப் படகுகள் மூலம் மீன்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால் குறித்த நேரத்தில் மீன்களை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று வீசும் காலங்களில் படகுகளை அணைத்து நிறுத்துவதற்கு, வசதி இல்லாததால், நடுக்கடலில் நிறுத்தப்படும் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்து சேதமடைகின்றன. விசைப்படகுகளை நிறுத்தி, மீன்களை இறக்குவதற்கு வசதியாக புதிதாக படகு நிறுத்தும் தளம் (ஜெட்டி பாலம்) அமைக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தினர். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் ரூ.23 கோடியில் ஜெட்டி பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான நிதி மீன்வளத் துறையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக டெண்டர் விடப்பட்டு, கடந்த ஜனவரி இறுதியில் கட்டுமானப் பணிகள் துவங்கின. பழைய ஜெட்டி பாலத்தில் இருந்து கடலுக்குள் 200 மீட்டர் நீளத்தில், முனையில் இரண்டு பக்கமும் தலா 75 மீட்டர் அளவில் ‘டி’ (T) ஆங்கில எழுத்து வடிவில் 150 மீட்டர் அகலத்தில் இந்த ஜெட்டி பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ஜெட்டி பாலம் கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த புதிய ஜெட்டி பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இதில் 150 விசைப்படகுகள் வரை நிறுத்த முடியும். மீன்களை படகுகளில் இருந்து இலகுவாக இறக்கி வைக்கவும் முடியும். புதிய ஜெட்டி பாலம் கட்டும் பணி, 60 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. ஓரிரு மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிந்து, மீனவர்கள் பயன்பாட்டுக்கு இந்த பாலம் திறக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.

The post ராமேஸ்வரம் கடற்கரையில் பணிகள் தீவிரம் ₹23 கோடியில் புதிய ஜெட்டி பாலம்: 150 விசைப்படகுகளை நிறுத்தலாம் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Beach ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!